கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே,
உங்கள் அனைவரையும் இயேசு கிறிஸ்துவின் இன்ப நாமத்தினாலே வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கடவுளின் வார்த்தைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது நம் அனைவர் மேலும் விழுந்த மிகப்பெரிய கடமையாக உள்ளது. நாம் கடவுளின் வார்த்தைகளை தியானிக்கும் நேரங்களில் அவர் நமக்குள் ஆளுகை செய்து நம்மை நல் வழிகளில் நடத்தி பிறருக்கு முன் உதாரணமாக மாற்றி வாழ வைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அவபக்தியான மனிதன்
இன்றைக்கு நாம் தியானிக்கப் போகும் வேதத்தின் பகுதி ரோமர் 1:19-20. இந்த வசனங்களை நாம் வாசிக்கும் போது அவபக்தியான மனிதர்களைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் பேசுவதை நாம் காண முடிகிறது. அவபக்திக்கும் அநியாயத்துக்கும் எதிரான தேவ கோபம் பற்றி கூறி விட்டு, தேவனைக் குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிடுவதை நாம் காண முடிகிறது. உலக மக்கள் அனைவருக்குமே நல்லது எது தீயது எது என்று பகுத்தறியும் தன்மை கடவுளால் வழங்கபடித்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆம், நன்மையானவைகள் அனைத்துமே கடவுளின் பிரசன்னத்தினைக் குறிப்பதாகவே இருப்பதாக நான் உணர்கிறேன்.
போக்குச்சொல்ல இடமில்லை
இந்த நிலையில் அப்போஸ்தலனாகிய பவுல் கூறிய இந்த வார்த்தைகள் மிகவும் உன்னிப்பாக நோக்கப்பட வேண்டியதாகி உள்ளது. அனைவருக்குமே தேவனைப் பற்றி அறியும் அறிவு வழங்கப்பட்டுள்ளது என்பதை மிகவும் தெளிவாக அவர் கூறுகிறார். அனைவருக்கும் அந்த அறிவு வழங்கப்பட்டுள்ளதால் நாம் நியாயத்தீர்ப்பு நாளில் போக்கு சொல்ல இடம் இல்லை என்ற தகவலை அவர் நமக்கு எடுத்து உரைக்கிறார். மேலும், தேவனைப் பற்றிய அறிவானது தேவனாலேயே வெளிப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறுவதை நாம் காண முடிகிறது.
கடவுளின் வார்த்தைகளை அறிந்த நாம் முதலில் அவற்றின் படி நடக்க அழைக்கப்படடவர்களாக இருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. கடவுளைப் பற்றி அறிந்தும் அவரைத் தொடர முடியாமல் தவிக்கும் எண்ணற்ற மக்களுக்கு நாம் முன்னுதாரணமாக வாழ்ந்து அதன் மூலமாய் அவர்கள் வாழ்விலும் கிறிஸ்து எனும் ஜோதியை ஏற்றி அவர்களையும் மீட்டு சரியானப் பாதையில் நடத்திட கடமைப்பட்டவர்களாயிருக்கிறோம் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. மீண்டும் நாளை சந்திக்கலாம்.
Comments
Post a Comment